Wednesday, October 20, 2010

மகாபாரதம் பேசுகிறது – சோ

MP

போன புத்தகக்கண்காட்சியில் திரு. சோ அவர்கள் எழுதிய மகாபாரதம் பேசுகிறது புத்தகத்தை வாங்கி வைத்திருந்தேன். இப்போது தான் படிக்க ஆரம்பித்துள்ளேன். மகாபாரதத்தில் நிறைய சுவாரசியமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன.

எனது சிறு வயதில் டிடியில் மகாபாரதம் தொடரை ஒளிபரப்புவார்கள். அப்பொழுது அது வெறுக்கத்தக்க விஷயமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கள் வீட்டுப் பெரியோர்கள் அந்த ஒரு மணிநேர தொடரை பார்த்து விட்டு, அவர்களின் நண்பர்களுடன் அதைப் பற்றி விவாதங்களில் ஈடுபடுவதைக் கண்டுள்ளேன். அப்பொழுது மகாபாரதம் என்ன அவ்வளவு சுவாரசியமானதா என்று எண்ணம் தோன்றும். ராமாயணத்தைப் போல் இல்லாமல் இதில் நிறைய சிறு கதைகளும் நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களும் இருக்கின்றன.

சோ அவர்கள் கதை சொல்லும் விதம் ஒரு ஃபிக்ஸன் கதையைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்ப்படுத்துகிறது. நிறைய சிறுசிறு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. நேற்று படித்துக் கொண்டிருக்கும் போது அறிந்து கொண்டது, ஒருவன் தனது 14-வது வயது வரை செய்யும் பாவங்கள் அவனைச்சேராது என்பது. இது இப்போதுள்ள நடைமுறைக்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை.

இந்த மாதிரி சிறு விஷயங்களைத்திரட்டி சீக்கிரம் ஒரு பதிவாக இட முயல்கிறேன்.

Monday, October 18, 2010

காந்தம்

G262SP

இதயத்தை இரும்பாகத்தான் வைத்திருந்தேன்

யாருக்குத் தெரியும்

அவள் காந்தமாக இருப்பாள் என்று…

Tuesday, October 12, 2010

படித்ததில் பிடித்தது - தனிமை

கண் சிமிட்டும் கணிணி
கை அருகில் பாடல் கருவி
குழுமியிருக்கும் மின் அணு சாதனங்கள்
ஆனாலும் அறை முழுதும் வெறுமை
இதன் பெயர் தான் தனிமை

குளிர்சாதன பெட்டியில்
உணவு வகைகளின் பட்டியல்
சமைக்க செல்லாத மனது
சுவர் ஓரத்தை வெறித்திருக்கும்,இமைக்காத விழி அது
இதன் பெயர் தான் தனிமை

ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்
மின் அரட்டை ஆரம்பிக்கலாம் நொடியில்
ஓசை கேட்காத பல நூறு குரல்கள்
பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்
இதன் பெயர் தான் தனிமை

தலை மேலே அம்மாவின் ஸ்பரிசம்
திரும்பி பார்த்தால் காற்றுதான் முறைக்கும்
மூச்சை முட்டும் அளவு நினைவுகளின் கூட்டம்
ஆனால் கண்களில் மட்டும் கண்ணீர், துடைக்காமல் இருக்கும்
இதன் பெயர் தான் தனிமை

அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்
காரணம் இல்லாததால் அது மனதினுள் காவல்
அயல்நாட்டில் அடைந்திருக்கும் இளைஞர்களின் நிலைமை
தமிழ் என்ற தோழி மட்டும் துணையிருக்கும் கொடுமை
இதன் பெயர் தான் தனிமை