Saturday, September 20, 2008

எல்லாந்தழுவியவர்களாக நாம் ஆக வேண்டும் - ஸ்ரீ அரவிந்தர்!




நமது வழி பூரணத்தை அடையும் வழியாக இருக்கட்டும், விட்டுவிட்டு ஓடிவிடும் வழியாக இருக்க வேண்டாம்; போரில் வெற்றி பெறுதல் நமது நோக்கமாக இருக்கட்டும், எல்லாப் போராட்டத்திலிருந்தும் தப்பிச் செல்லுதலாக இருக்க வேண்டாம். 

யோகத்தின் மூலம் நாம் பொய்மையிலிருந்து உண்மைக்கும், பலவீனத்திலிருந்து சக்திக்கும், துன்பம் துயரத்திலிருந்து பேரின்பத்திற்கும், அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரத்திற்கும், மரணத்திலிருந்து அமர நிலைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், குழப்பத்திலிருந்து தெளிவிற்கும், அபூரணத்திலிருந்து பூரணத்திற்கும், பிரிவிலிருந்து ஐக்கியத்திற்கும் உயராம். 

இறைவன் எப்படிப் பூரணனாக இருக்கிறானோ அப்படியே நாமும் பூரணமடைதல், அவன் எப்படித் தூயோனாக இருக்கிறானோ அப்படியே நாமும் தூய்மையாதல், அவன் எப்படி ஆனந்தமயமாக இருக்கிறானோ அப்படியே நாமும் ஆனந்தமயமாதல்; அதன்மேல், நாம் பூரணயோகச் சித்தர்கள் ஆனபோது மனித இனம் முழுவதுமே அந்த நிலையை அடையும்படி செய்தல் - இதுவே நமது குறிக்கோள் ஆகும். 

இப்பொழுது நாம் நமது இலட்சிய நிலைக்குக் குறைந்தவர்களாக இருந்தபோதிலும், அந்த முயற்சிக்கு நம்மை முழுமனதோடு கொடுத்துவிட்டால், எப்பொழுதும் அந்தக் குறிக்கோளுடனேயே, அதற்காகவே வாழ்ந்து அந்தப் பாதையில் இரண்டு அங்குலம் முன் சென்றால் அது போதும். அதுகூட மனித இனம் அது இப்போது வாழும் போராட்ட நிலையிலும் மங்கல் ஒளியிலிருந்து இறைவன் நமக்காகத் திட்டமிட்டுள்ள ஒளி பொருந்திய இன்ப நிலைக்கு அதனை இட்டுச்செல்ல உதவும். ஆனால் நமது உடனடி வெற்றி எதுவாக இருந்தபோதிலும் பிரயாணம் முழுவதையும் முடிப்பதே நமது மாறாத குறிக்கோளாக இருக்க வேண்டும், போகும் பாதையிலுள்ள அரைகுறையான ஓய்விடத்தில் திருப்தியோடு படுத்துவிடக்கூடாது. 

உலகிலிருந்து முற்றிலுமாக நம்மை விலக்கிக்கொண்டு போகும் எல்லா யோகமும் தெய்வீகத் தவத்தின் உயர்வான, ஆனால் குறுகிய தனித்துறை வளர்ச்சியாகும். பூரணனாகிய இறைவன் தனது பூரணத்தில் எல்லவற்றையும் அனைத்துக்கொள்கிறான்; நாமும் எல்லாந்தழுவியவர்களாக ஆகவேண்டும்.